Tuesday, August 7, 2007

ஒரு காதலின் பக்கங்கள்

என்றும் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு நாள் உன்னை மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்.
------- உன் (ஒரு) காதலி.


நாம், நமது என்று
வளர்ந்த உறவு மொழிகள்
இன்று….
நீ – உன்
நான் – என் என்று
தொலைபேசியிலேயே மொழி மாறி
தொலைவாய் தொலைந்து போகின்றன!

எழுத தொடங்குகிறேன்
யார் பெயரும் ஞாபகமில்லை
உன் பெயரை தவிர….
ஒவ்வொரு முறையும் தவிர்கிறேன்
மூச்சு திணறி உயிர் தவிக்கிறேன்

கரைந்து போன பேனா மை போல
மிச்சமிருந்த கடைசி துளி
உயிர் கொண்டு எழுதுகிறேன்…….
……உன் முகவரியை
என் திருமண அழைப்பிதழில்…!
“அவசியம் கலந்து கொள்ள வேண்டும்”

புன்னகை மாறா முகம்
சிரித்து சிரித்து பேசும் பேச்சு
உனக்கு கிடைத்த இந்த வரங்கள்தான்
என் காதல் சாபத்தை
உனக்கு பெற்றுத் தந்ததா…?
சொல்…
என் காதல் உனக்கு சாபமா?

இனி நீ வேறு
நான் வேறு என்றானபோதும்
நம் மேல் விழுந்த
சந்தேக பார்வைகளை
உன் சிரிப்புகளால் வென்றாய்!
அவர்களைப் போலவே
என்னையும் எண்ணி
அந்த முகமூடி சிரிப்புகளால்
ஏன் என்னைக் கொன்றாய்?

இதயமற்றவள் என்று
எண்ணிக் கொண்டாயோ?
உன் இதயம் உணர்ந்தவளை
ஏன் இந்த முகமூடிகளால்
ஏமாற்றப் பார்க்கிறாய்?

எனக்கும் கொஞ்சம்
கற்றுத் தருவாயா…..
அணு அணுவாய் சாகும்போது
சிரிப்பதற்கும்….
கண்ணீரே வராமல்
இதயம் வெடித்து அழுவதற்க்கும்…..!

மணமேடையில் நான்
முயன்றாலும் முடியாமல்
உனை தேடும் கண்கள்….
பார்வைகள் சந்திக்கும் போது
பாஷை இல்லாமல் சிரிக்கிறாய்..
என்னால் எப்படி சொல்ல முடியும்
அழாதே என்று…..!

திருமணமும் மரணமும்
ஒரே மேடையில் கண்டதுண்டா?
இன்று–என் திருமணமும்
உன் காதலியின் இறுதி சடங்கும்…
உண்மையைச் சொல்…
நீ எதில் கலந்துகொண்டாய்??

திருமணம் முடிந்தது
வாழ்த்துக்களும் முடிந்தது
விடைபெறுதல்களும் முடிந்தது…
“எல்லாம் சுபமாய் முடிந்தது”
பெரியவர்கள் சொன்னபோது
முடிந்து போனவை எவை என்று
புரியாமல் தடுமாறும்
இதயமொன்றை
கண்டுகொள்ளாமல் நீ……!

விடைபெற்று நகர்கிறாய்
கடைசியாக ஒருமுறை
திரும்பிப் பார்…..
வேண்டாம் .....பார்க்காதே
இதயம் ஊமையாய் அழுகிறது.
இனி தெரிந்தவர்கள் யாருமில்லை
என்று நினைத்தாயோ – இல்லை
இனி திரும்பவே மாட்டேன்
என சொல்லாமல் சொல்லி செல்கிறாயோ?

சொல்லாமலேயே போய்விட்டாய்….
உன்னில் இருந்த என்னை
என்ன செய்தாய் என்றும்
என்னில் இருக்கும் உன்னை
என்ன செய்வதென்றும்!!!!

காதலனுக்கு ஒரு திசை
காதலிக்கோ மறு திசை
யாருடன் செல்வதென்று
தெரியாமல் – பாவம்
நம் காதல்தான்
வாய் மூடி அழுது நிற்கிறது
அனாதையாய்……..!

குழந்தைக்கு என்ன பெயர்?
கேட்டதும் அறைக்குள்
ஒளிந்து கொள்கிறேன்
வெட்கம் என்றெண்ணியிருப்பார்கள்
ஏன் ஒளிந்து கொண்டேன்?
உன் பெயரை சொல்லிவிடக் கூடாது
என்பதற்காகவா?

உலகம் மிகவும் சுருங்கி விட்டது
நாம்தான் தினமும்
தூரமாய் விலகிச் செல்கிறோம்.
கடிதமில்லை..
தொலைபேசியுமில்லை..
மின்னஞ்சல்கள் கூட இல்லை..

இவை
எல்லாம் மறந்துவிட்டோம்
என்று சொல்லிக்கொள்ள நாம் நடத்தும்
நாடகங்களா……?

மறந்துவிட்டேன் என்று
எண்ணி இருந்திருப்பாயோ?
பலமுறை இறந்துவிட்டேன்
என்பதை ஒருமுறையேனும்
உணர்ந்திருப்பாயா?

என்னால் எப்போது
முடிகிறதோ அப்போது
சொல்கிறேன் உன்னிடம்
மறந்துவிடு என்று!
எனக்கு தெரியும்……
உன்னால் முடியுமென்றால்
முன்பே சொல்லியிருப்பாய் என்று…!




காதலனின் கடைசி பக்கம்…..

விரைவில் நான் இறந்துவிடுவேன்…!
உன்னை
மறந்து விடுவதென
முடிவெடுத்து விட்டேன்.


என்றும் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு நாள் உன்னை மறந்திருப்பேன்
அன்று நானும் இறந்திருப்பேன்.

------- உன் (ஒரே) காதலன்.

No comments: