Wednesday, July 25, 2007

அரசு விடுமுறை

சொர்க்கத்திலும்
தேவதை ராஜ்ஜியங்களிலும்
இன்று - அரசு விடுமுறை.

உன் பிறந்தநாளை முன்னிட்டு.......!

உயிர் தின்னிகள்!



உயிரோடு தின்றுவிட்டது பசி!
உயிரின் ஒருதுளியை மட்டும்
விட்டுச்சென்றது அதன் கொடூரம்!


ஐந்தறிவு ஜீவன்
காத்திருக்கிறது பொறுமையுடன்...
நான் இறக்கும் நேரத்திற்க்காகவும்...
பின்னர்
வலி தெரியாமல்
என்னை தின்பதற்கும்!


அந்த இரக்கத்திற்கு
என் உடலையே
அதற்கு உணவாக்குவதில்
மகிழ்கிறேன்.


உணவில்லாமல் செத்தவனே
இங்கு உணவாவதுதான்
ஆச்சரியம்!


ஓ மனிதர்களே!
பிணங்களை தின்பதால்
இந்த கழுகுகளை
பிணம் தின்னி என்கிறீர்களா?


பசிக்காக உண்ணாமல்
ருசிக்காக உண்ணும்
நீங்களும்
என் சாவுக்கு
காரணமில்லையா?


பசியின் பசிக்கு
எங்களை உயிரோடு
தின்னக்கொடுத்த உங்களை
என்னவென்று அழைப்பது....

உயிர் தின்னிகள் என்றா?

Wednesday, July 18, 2007

கொடிய நோய்



உலகெங்கும் நடக்கிறது
நோய் தீர்க்கும்
அற்புத ஜெபக்கூட்டங்கள்.

இவர்களுக்குத்தான்
தெரியவில்லையென்றால்
கடவுளுக்குமா .....?

பசியை விட
கொடிய நோய் வேறு ஏது?

அவர்களை குணமாக்கும்
கடவுள்கள் ஏனோ
எங்களை
ஒருமுறைக்கூட தீண்டுவதில்லை!

ஓர் வேண்டுகோள்....




அமிர்தம் வேண்டி
மலையை கடைந்தனர்
தேவர்களும் அசுரர்களும்
சாகாவரம் பெற!

சாகா வரமும் வேண்டாம்
அமிர்தமும் வேண்டாம்
அரை சாண் வயிறு காய்க்கிறது
அழுதழுது உயிரும் கரைகிறது!

கடவுள்களுக்கும்
மனிதர்களுக்கும்
ஓர் வேண்டுகோள்....

உதவுங்கள்!

பழையது கூட போதும்
பிரியும் முன்
நனைத்துக்கொள்கிறோம்
ஒருமுறை எங்கள் உயிரை!

Tuesday, July 17, 2007

கடவுளின் காதுகளுக்கு....


பசியில் கதறும்
ஏழைகளின் குரல்
கடவுளின் காதுகளுக்கு
எட்டவில்லை.

அவர்
பக்தன் கட்டிய
பால் குளத்தில் ஆழமாக
மூச்சுப்பிடித்து
நீச்சலடித்துக்கொண்டிருந்தார்.

Saturday, July 14, 2007

கண்ணீரின் கதை...?

சிந்தாமல்
கண்களுக்குள்
ஒழிந்து கொண்ட
அந்த கண்ணீர் துளிகளின்
கதை என்னவோ?

கடவுள்

கடந்து உள்ளே வா!
கட + உள் = கடவுள்.

கண்களை மூடிவிடு!
யாரை தேடுகிறாய்
இன்னும் வெளியே?

இதயம் திற
கடந்து உள்ளே வா!

(விளக்கம் தந்த இரயில் நண்பருக்கு எனது நன்றிகள்)

போதிமரங்கள்

போதிமரங்கள் ஏராளம்
ஊரெங்கும்!

ஞானம் தேடும்
புத்தர்கள்தான் யாருமில்லை!

மூச்சும் கவிதையும்

கவிதை
என் மூச்சு.

நீதான்
என் ஒரே கவிதை.

உன்னை எழுதிவிடுவேன்
என்றெண்ணியே
கவிதைகளையும் நிறுத்திவிட்டேன்.

நீ பிரிந்தபின்
மூச்சும் கவிதையும்
எனக்கெதற்க்கு !

ஒரு கோடி இதயங்கள்

ஒன்றல்ல.....
ஒரு கோடி இதயங்கள் வேண்டும்
உன்னை காதலிப்பதற்க்கும்,
உடைந்து அழுவதற்கும்!

Wednesday, July 11, 2007

மௌனம் வேண்டாம்

கண் திறந்த சூரியன்
தன் ஒளி கைகளால்
இதமாய்
தேகம் வருடியதும்
மெதுவாய் கண்விழித்து
பூத்துச் சிரிக்கின்றன
மெல்லிய பூக்கள்!

உன் மௌனத்தில்
உயிர்வாடி
உதிர்ந்த இலைச்சருகாய்
கருகித் தவித்து
காத்துக் கிடக்கிறது
இந்த சூரியன்
பூவே - உந்தன் காலடியில்!

கண்டுகொள்ளாமல்
கண்மூடி நிற்பதே
உன் நியதியோ?
மெல்லிய பூவே...
மௌனம் வேண்டாம்
பதில் சொல்.

என் சுவாசக்காற்றில்....

தாஜ்மகாலை
சுற்றி வீசும் காற்றில்
காதல் கலந்திருக்கும்.

என் சுவாசக்காற்றில்
நீ
கலந்திருப்பது போல!

தனிமை

தனிமை என்பது
நான் தனித்திருக்கும்
பொழுதுகளல்ல.....!

நீ எனைப்பிரியும்
ஒவ்வொரு நொடியும்
எனக்கு தனிமைதான்!

தனிமையில் தவிக்கிறேன்!

சுவாசித்துப் பார்!

இதுவரை வாசித்த
எனது கவிதைகளை
இனி - ஒருமுறையேனும்
சுவாசித்துப் பார்!

உனக்காய் கருகும்
ஒரு இதயத்தின்
வாசம் கலந்திருக்கும்.

Tuesday, July 10, 2007

நிலா பெண்

மின்சாரமில்லாத இரவுகளிலும்
உன் வீட்டில் மட்டும்
பௌர்ணமி வெளிச்சம்!
எப்படி?
ஓ..! மன்னித்துவிடு!
அங்கு நிலா ஒன்று
குடி இருப்பதை மறந்துவிட்டேன்!

உன்...... நான்!




கிடைக்காத
கொடுக்காத முத்தங்கள்
சேமித்து வைக்கிறேன்
எல்லாம் உனக்காக....

தீராத என் ஆசைகளை
தீர்ததுக்கொள்ளும்
நாள் எப்போது?

தென்றலுக்கு இங்கே தடை
என் தலை கோத
உன் விரல்களுக்கு
மட்டுமே அனுமதி!

பறவைகளோடு இன்று
என் ஸ்னேகிதம்!
உன் பெயரை
அழகாக பாடிப்பார்க்கும்
ஓர் முயற்சி!

பூக்களிடம் நான்
மொழி கற்கிறேன்!
உன் பெயரின்
அர்த்தங்களை அறிந்துகொள்ள!

உயிரின் உயிரே!
உள்ளுக்குள் உள்ளத்தில்
மீண்டுமொருமுறை
புதிதாய் பிறந்து
வளராமல்
தவழக்கூடத் தெரியாமல்
அழுது கிடக்கிறேன்
உன்...... நான்!

தலை கோதி
தாலாட்டுப் பாடி
உன் மடியில் தூங்க வைக்க
மீண்டுமொருமுறை
எப்போது பிறப்பாய்?

அம்மா!

மீண்டும் நீ பிறப்பாய்
எனக்கே நீ கிடைப்பாய்
மிச்சமிருக்கிறது
இன்னும் பல ஜென்மங்கள்
உன்னோடு!

காத்திருக்கிறேன்
உனக்காக
வளராமல்
தவழக்கூட தெரியாமல்
உன்...... நான்!

என் அக்காவுக்கு




ஜூலை 11


இன்று உன் பிறந்த நாள்.




முன்புபோல் இப்போது
அழகான வாழ்த்து அட்டைகள் இல்லை
பரிசுகள் கூட இல்லை.


ஆனாலும் நீ எதிர்பார்த்திருக்கமாட்டாய்
உன் தம்பியின்
இந்த வாழ்த்து செய்தியை!


நிச்சயமாய்
உதட்டோரம் சிறு புன்னகையும்
மனத்தோரம் என் ஞாபகமும்
வந்து செல்லும்.


உனக்கு ஞாபகமிருக்கிறதா...?
என் பிறந்த நாட்களில்
நீ மட்டும் இரண்டு
வாழ்த்து அட்டைகள் கொடுப்பாய்
பிறரை விட உனக்குத்தான்
பாசம் அதிகம்
என்று எனக்கு சொல்ல....


மீதி கதைகளை
நேரில் பேசிக்கொள்ளலாம்....


மீண்டுமொருமுறை சொல்லிக்கொள்கிறேன்

என் அன்பு அக்காவிற்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

ஜென்மங்களாய்

அன்று ....

ரோமியோ-ஜூலியட்
அம்பிகாபதி-அமராவதி
ஷாஜகான்-மும்தாஜ்
காவிய காதலர்கள் வரிசை

இன்று

நீயும்-நானும் என
ஜென்மங்களாய் தொடர்கிறது.

அழகு ரோஜா

ரோஜா தோட்டத்தில்
தூங்கிக்கொண்டிருந்த
உன்னை பார்த்ததும்
எழுதிய முதல் கவிதை

குப்பை மேட்டில்
அழகாய் தூங்குகிறது
ஒரு அழகு ரோஜா.

இனி ஒரு விதி செய்வோம்

இனி ஒரு விதி செய்வோம்
தனி மனிதனுக்கு
உணவு இல்லை என்றால்
ஜகத்தினை அழித்திடுவோம்
இது பாரதியின் விதி

அழித்திடுவோம் என்ற
பயமோ கடவுள்களுக்கு?
பாரதிக்கு மறு ஜென்மம் மறுக்கப்பட்டது.

யாருக்கு தெரியும்
இன்று பசியின் கொடுமைக்கு
கனவுகளையும் கவிதைகளையும்
மறந்துவிட்ட பாரதிகள்
எத்தனை பேர் என்று?

தேவதைக்கூட்டம்

தெருவில் தேவதைக்கூட்டம்
வருகிறது என்றேன்
ஆவலாய் பார்த்துவிட்டு
நண்பன் சொன்னான்
நீ மட்டும்தான்
வந்து கொண்டிருக்கிறாய் என்று...!

விரல்கள் தேவை

என்
கண்ணீர் பக்கங்களை
மாற்றி விட
உன் விரல்கள்
இல்லாததால் - தினமும்
அதையே வாசிக்கிறேன்.

Monday, July 9, 2007

ஒரு சிந்தனை

சிந்தனைக்கு எட்டாத
விசயங்களை எப்போதேனும்
சிந்தித்து பார்த்ததுண்டா ?

காதல்

பெயர் சொல்ல தெரியாத வலிக்கு
யாரோ வைத்த பெயர்
காதல்.


இதுபோல் கண்டதில்லை
இன்னொரு நோயை
இதயத்தில் ரணம்
நொடிக்கொருமுறை மரணம்
காதல்.