Saturday, August 25, 2007

ஒரு குட்டி தேவதை - 2

மின்சாரமில்லா
இரவுகளிலும்
உன் வீட்டில் மட்டும்
பௌர்ணமி வெளிச்சம்...
எப்படி?

ஓ..! மன்னித்து விடு...
அங்கு நிலா ஒன்று
பிறந்திருப்பதை மறந்துவிட்டேன்!

சிறகுகளில்லா வண்ணத்துப் பூச்சியே!
சின்ன சின்ன
உன் வர்ணங்களை
எங்கள் உயிர்களில் தெளித்தாயோ?
உனைக் காணும்
முகங்களிலெல்லாம் பொங்கும்
ரங்கோலி புன்னகைகள்!

இதழ்களை மெல்லத் திறந்து
காற்றோடு
அழகு மொழி பேசும்
பூக்கள் எல்லாம்
இன்று மூடிக் கொள்கின்றன!

சிவந்த இதழ்கள்
மெல்லத் திறந்து
நீ பூத்த புன்னகையில்
தோற்றுப் போனதால்!

ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்த
சின்ன ரோஜா மொட்டுக்கள்
தினமும் பயிற்சி செய்கின்றன...
உன் போல அழகாய்
கண் திறப்பதற்க்கு!

தூங்க வைக்கும்
தேவதைகள்
உன் கனவுகளில்
கதை சொல்வார்களோ?

தென்றலில் அசைந்து
தியானம் செய்யும்
அழகிய மலர் போல
நீ தொட்டிலில்
கண்மூடி தூங்கும்போது
சிறிதாய் கண்திறந்து
சின்ன இதழ்களை திறக்காமல்
மென்மையாய்
ஒரு புன்னகை செய்கிறாயே....
வார்த்தைகள் இல்லாத
கவிதை அது!

உயிர் பெற்று வந்த
கவிதையே...!
உனைப் பாட
வார்த்தைகள் இல்லாமல்
புதுமொழி தேடி
அலைகிறது.....
ஓர் கவிஞர் கூட்டம்!

தொட்டிலுக்குள் தூங்கும்
குட்டி நிலவு!

கண் சிமிட்டும்
விண்மீன் விழிகள்!

பஞ்சு மேகம் போல - இவள்
பிஞ்சு தேகம்!

எட்டி எட்டி உதைத்தத்தில்
தென்றல் பட்டுப் பட்டு - உன்
பட்டுப் பாதங்கள்
சிவந்தனவோ?

போதி மரம்
இனி வேண்டாம்!
இவள் நினைவுகளின் கீழ்
அமர்ந்தாலே போதும்...
ஞானம் பெறலாம்!

கங்கை நதியும்
இனி வேண்டாம்!
இவள் பஞ்சு விரல்களினால்
ஒரு தீண்டல் போதும்...
புனிதமாகி விடலாம்!

Sunday, August 19, 2007

என் போதிமரம்




என்னுள் இருந்த
உன்னை
உணரச் செய்தாய்.

நெஞ்சுக்குள் நீயே
சிறு விதையாய்
விழுந்தாய்!

உயிரை நீராய்
அழகாய்
உருகச் செய்தாய்!

சிறு பொழுதினுள்
சிந்தனைக் கெட்டாத
போதிமரமாய்
விரிந்து நின்றாய்
என்னுள்!

உனக்குள்
நானே போதிமரம்!
எதை தேடுகிறாய்
இன்னும் வெளியே?
கடந்து
உள்ளே வா!

Saturday, August 18, 2007

நினைவுகள் - 29

காதல்
பசுமையான இலைகள் போல!
அதன் நினைவுகள்
ஆழமான வேர்கள் போல!

இலைகள் உதிர்ந்து போகும்.
வேர்கள்....?

நினைவுகள் - 28

காதல்
ஒரு ரோஜா தோட்டம் போல!
அதன் நினைவுகள்
அழகான முட்கள் போல!

பூக்கள் உதிர்ந்து போகும்.
முட்கள்....
என்றும் வாழும்.

நினைவுகள் - 27

அழுது கொண்டிருந்தாய் - நீ
ஆறுதல் சொன்னேன் -நான்
அன்று தான் என்று
இதயம் திருடு போன
கதை சொன்னாய்.

இன்று
உயிரே திருடு போகி
இறக்காத நினைவுகளுடன்
இறந்து கொண்டிருக்கிறேன்
தினமும்...

உயிரும் ஆறுதலும்
எனக்கு எப்போது?

நினைவுகள் - 26

இதயம் துடிக்கும்
ஒவ்வொரு முறையும்
உன் பெயர்
என் நினைவுகளில்
பதிவு செய்யப்படுகிறது.

நினைவுகள் - 25

ஆக்ஸிஜன் எனக்கு
தேவைப்படுவதில்லை.

உன் நினைவுகளை
சுவாசிக்க
ஆரம்பித்தது முதல்!

நினைவுகள் - 24

"நான்தான் இந்த
ரோஜா பூ" என்று
நீ சொன்னது முதல்
ரோஜாக்களை
இரசிக்க தொடங்கினேன்.

"முட்களை எப்போது
இரசிப்பாய்?" - என்று
நீ கேட்ட போது
"முட்களாய் நீ பூத்தால்"
என்றேன்.

பூத்து விட்டாய்
இன்று - நினைவுகளாக....
இரசித்துக் கொண்டிருக்கிறேன்.

நினைவுகள் - 23

ரோஜா பூவாக
நீ பூத்த
என் இதயம்
உன் நினைவு முட்களை
முத்தமிட்டு முத்தமிட்டு
அழகாய் அழுகிறது
தினமும்!

நினைவுகள் - 22

"மறந்து விடு"
நீ கடைசியாக
சொன்ன வார்த்தைகள்.

நீ சொல்லி மறுப்பேனா?
மறந்து விட்டேன்
முழுவதுமாய்...
என்னைக் குறித்த நினைவுகளை!

நினைவுகள் - 21

....பின்னொரு நாளில்
சந்தித்துக் கொண்டபோது
நீ கேட்டாய்...
"என்னை நினைவிருக்கிறதா?"
புன்னகைத்து விட்டு
நெஞ்சோடு நான்
சொல்லிக் கொண்டேன்
"இதுவரை இருப்பதே
உன் நினைவுகளால்தான்".
கலங்கிய கண்கள்
கண்டு தெரிந்து கொண்டேன்
அது உனக்கும் கேட்டது என்று!.

நினைவுகள் - 20

நினைவுகளில் நினைவாக....
கனவுகளில் கனவாக....
உயிரில் உயிராக....
நீயே வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

நினைவுகள் - 19

கனவிலும்
நினைவிலும்
என் - தேவதை
உன் ஊர்வலம்தான்.

நினைவுகள் - 18

தினமும் காலையில்
என் தலையணையில்
சின்ன சின்னதாய்
சிதறிக் கிடக்கும்..

உன் நினைவுகள்
கண்ணீர் துளிகளாய்..!

நினைவுகள் - 17

வரப்போகும் கனவுகளை
சொல்லிவிட முடியுமென்னால்!

ஆழ் மனதின் நினைவுகளே
கனவுகளின் காட்சிகள்!

என் மனம் முழுவதும்
உன் நினைவுகள்தானே!

நினைவுகள் - 16

கனவுகள் என்றும்
நிஜங்கள் என்றும்
பிரித்து பேசுவதில்
அர்த்தமில்லை!

எல்லாம்
உன் நினைவுகளாக
இருக்கும்போது!

நினைவுகள் - 15

கண்கள் திறந்தாலும்
கண்கள் மூடினாலும்
உன் நினைவுகளே!

தெரியவில்லை எனக்கு
எவை கனவுகள் என்றும்
எவை உண்மைகள் என்றும்!

நினைவுகள் - 14

ஒருநாள்....
என்னுயிர்
தீர்ந்து போகும்.
உடல் கூட
புதைந்து போகும்!

அன்று முதல்
அந்த கல்லறை தோட்டத்தில்
ஒரு இதயம் துடிக்கும்
ஓசை கேட்டு கொண்டேயிருக்கும்

ஓயாமல்....
உன் நினைவுகளை
சொல்லிக் கொண்டு..!

நினைவுகள் - 13

உன் நினைவுகளெல்லாம்
தண்ணீர் ஓவியங்கள்
எனக்கு!

வெறும் கண்களுக்கு
தெரிவதில்லை - இந்த
கரையாத ஓவியங்கள்.

நினைவுகள் - 12

என் இதயம்
மட்டுமல்ல...

நான் கூட
உன் நினைவுகளினால்தான்
துடித்துக் கொண்டிருக்கிறேன்.

நினைவுகள் - 11

நீயோ
நினைவுகளாய்
என்னுள்
உயிர் வாழ்கிறாய்.

உனக்கு தெரியுமா?
நான்
உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே
அந்த நினைவுகளால்தான்!

நினைவுகள் - 10

உன் நினைவுகளெல்லாம்
என் நெஞ்சுக்குள்
இருப்பதால்
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் நினைவுகள்.

என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும்
உறுதி செய்கிறது...
இன்னும் நீ
என் நினைவுகளில்
இருக்கிறாயென்பதை!

நினைவுகள் - 9

மறந்து விட வேண்டும்
என்று சொல்லியே
ஒவ்வொரு நொடியும்
உன்னை
நினைத்துக் கொள்கிறேன்.

நினைவுகள் - 8

இங்கு
என் நினைவுகளென்று
எதுவுமில்லை!

இருப்பவையெல்லாம்
உன் நினைவுகள்
மட்டும்தான்.

நினைவுகள் - 7

என் நினைவுகளெல்லாம்
மறந்து போனாலும்
உன் நினைவுகளில்
மீண்டும் உயிர் வாழ்வேன்.

நினைவுகள் - 6

உயிர் முழுவதும்
கரைந்து போன பின்பும்
ஒரு துளி நினைவுகள்
கடைசி நொடிகளில்
உயிராய் ஊசலாடும்
அவை
உன் நினைவுகளாய்தானிருக்கும்!

நினைவுகள் - 5

எனக்கு
நினைவுகள் இருக்கும்வரை
உன் நினைவுகள்
என்னுள் இருக்கும்!

நினைவுகள் - 4

எனக்கு கிடைத்த
வரமும் சாபமும்...
நீ மட்டுமல்ல
நீ கொடுத்த
நினைவுகளும்தான்!

நினைவுகள் - 3

மறந்து விடுவதற்கல்ல....
நினைத்துக் கொள்வதற்குத்தான்
நினைவுகள்.

Friday, August 17, 2007

நினைவுகள் - 2

இதயம் துடிப்பது
கண்கள் இமைப்பது
மூச்சுக் காற்று.....

அது போலத்தான்
உன் நினைவுகளும்.
யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை!

கண்களை இமைக்காமல்
மூச்சுக் கூட விடாமல்
இருந்து விடுவேன் சில நிமிடங்கள்.

ஆனால்
உன்னை நினைக்காமல்.....
ஒரு கணம் கூட முடியாது.

நினைவுகள் - 1

ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தே
உயிர் வாழ்கிறேன்!

ஒவ்வொரு நொடியும்
உன் நினைவுகளில்
இறந்து கொண்டிருக்கிறேன்.

புல்லாங்குழல்

என் மூச்சுக் காற்றில்
உயிர் வாழ்ந்தாலும்
நான் இசைத்தால்
ஆயிரம் கண் கொண்டு
அழுகிறது
இந்த புல்லாங்குழல்!

அழுகை

காற்றில் ஆடும்
தீபங்களை கண்டு
அழுகிறது
ஓர் மெழுகுவர்த்தி!

கடவுளிடம் சில கேள்விகள்

கடவுள்!
ஒவ்வொரு மனிதனாலும்
சந்திக்கப்பட வேண்டியவர்!

பல கேள்விகள் என்னுள்,
என்றேனும் சந்தித்தால்
அவனோடு
விடை தேடிக் கொள்வேன்.

படைப்பதும் அழிப்பதும்
உன் செயலா?
ஆம் என்றால்
உனக்கு அதிகாரம்
கொடுத்தவர் யாரோ?

நானே பரம்பொருள்
நானே படைத்தவன்
சகல அதிகாரங்களும்
எனக்குத்தான் என்கிறாயோ?

சரி...
மனிதனுக்கு
மரணத்தை கொடுத்துவிட்டு
நீ மட்டும் ஏன்
சாகாவரம் எடுத்துக்கொண்டாய்?

பிறப்பு, இறப்பு
அழுகை, சிரிப்பு
மகிழ்ச்சி, சோகம்
நட்பு, காதல்
முதுமை, நோய்
பசி, வலி
கண்ணீர்......
ஒரு முறையேனும்
உணர்ந்திருக்கிறாயா?

மனிதனோடு ஒப்பிடாதே
நான் மனிதன் இல்லை
உணர்வுகள் கடந்தவன் நான்
என்கிறாயோ?

ஆம்.
அதுவும் சரிதான்
நீதான் மனிதனேயில்லையே!

கொலை செய்யாதே
என்று போதித்துவிட்டு
நீ மட்டும் ஏன்...?

ஒன்றைக் கொன்று
மற்றது உயிர் வாழட்டும்!
இதுதானே
உன் படைப்பின் இரகசியம்!
உயிர் என்பது
உனக்கு மனிதன் மட்டுமா?

உன் பெயரால் நடக்கும்
படுகொலைகள், கலவரங்கள்
பழி ஏற்க்கப் போவது யார்?

மனிதரின் செயலுக்கு
நானா பொறுப்பு என்கிறாயோ?

இன்னும் ஏன்
மறைந்தே வாழ்கிறாய்?
ஒருமுறை இங்கே வந்து
இந்த முட்டாள் மனிதர்க்கு
உண்மைகளை சொல்ல
ஏன் முடியவில்லை உன்னால்?

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
உணவு கொடுக்கும் நீ
மனிதர்களை மட்டும் ஏன்
பசியில் இறக்க விட்டாய்?
பசி என்றால்
உனக்கு புரியுமா?

கடைசியாக....
மனிதர்களுக்கு தீர்ப்பு நாள்
நிர்ணயித்தது நீ என்றால்
உனக்கு தீர்ப்பு நாள்
யாரால், எப்போது?

Tuesday, August 7, 2007

ஒரு காதலின் பக்கங்கள்

என்றும் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு நாள் உன்னை மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்.
------- உன் (ஒரு) காதலி.


நாம், நமது என்று
வளர்ந்த உறவு மொழிகள்
இன்று….
நீ – உன்
நான் – என் என்று
தொலைபேசியிலேயே மொழி மாறி
தொலைவாய் தொலைந்து போகின்றன!

எழுத தொடங்குகிறேன்
யார் பெயரும் ஞாபகமில்லை
உன் பெயரை தவிர….
ஒவ்வொரு முறையும் தவிர்கிறேன்
மூச்சு திணறி உயிர் தவிக்கிறேன்

கரைந்து போன பேனா மை போல
மிச்சமிருந்த கடைசி துளி
உயிர் கொண்டு எழுதுகிறேன்…….
……உன் முகவரியை
என் திருமண அழைப்பிதழில்…!
“அவசியம் கலந்து கொள்ள வேண்டும்”

புன்னகை மாறா முகம்
சிரித்து சிரித்து பேசும் பேச்சு
உனக்கு கிடைத்த இந்த வரங்கள்தான்
என் காதல் சாபத்தை
உனக்கு பெற்றுத் தந்ததா…?
சொல்…
என் காதல் உனக்கு சாபமா?

இனி நீ வேறு
நான் வேறு என்றானபோதும்
நம் மேல் விழுந்த
சந்தேக பார்வைகளை
உன் சிரிப்புகளால் வென்றாய்!
அவர்களைப் போலவே
என்னையும் எண்ணி
அந்த முகமூடி சிரிப்புகளால்
ஏன் என்னைக் கொன்றாய்?

இதயமற்றவள் என்று
எண்ணிக் கொண்டாயோ?
உன் இதயம் உணர்ந்தவளை
ஏன் இந்த முகமூடிகளால்
ஏமாற்றப் பார்க்கிறாய்?

எனக்கும் கொஞ்சம்
கற்றுத் தருவாயா…..
அணு அணுவாய் சாகும்போது
சிரிப்பதற்கும்….
கண்ணீரே வராமல்
இதயம் வெடித்து அழுவதற்க்கும்…..!

மணமேடையில் நான்
முயன்றாலும் முடியாமல்
உனை தேடும் கண்கள்….
பார்வைகள் சந்திக்கும் போது
பாஷை இல்லாமல் சிரிக்கிறாய்..
என்னால் எப்படி சொல்ல முடியும்
அழாதே என்று…..!

திருமணமும் மரணமும்
ஒரே மேடையில் கண்டதுண்டா?
இன்று–என் திருமணமும்
உன் காதலியின் இறுதி சடங்கும்…
உண்மையைச் சொல்…
நீ எதில் கலந்துகொண்டாய்??

திருமணம் முடிந்தது
வாழ்த்துக்களும் முடிந்தது
விடைபெறுதல்களும் முடிந்தது…
“எல்லாம் சுபமாய் முடிந்தது”
பெரியவர்கள் சொன்னபோது
முடிந்து போனவை எவை என்று
புரியாமல் தடுமாறும்
இதயமொன்றை
கண்டுகொள்ளாமல் நீ……!

விடைபெற்று நகர்கிறாய்
கடைசியாக ஒருமுறை
திரும்பிப் பார்…..
வேண்டாம் .....பார்க்காதே
இதயம் ஊமையாய் அழுகிறது.
இனி தெரிந்தவர்கள் யாருமில்லை
என்று நினைத்தாயோ – இல்லை
இனி திரும்பவே மாட்டேன்
என சொல்லாமல் சொல்லி செல்கிறாயோ?

சொல்லாமலேயே போய்விட்டாய்….
உன்னில் இருந்த என்னை
என்ன செய்தாய் என்றும்
என்னில் இருக்கும் உன்னை
என்ன செய்வதென்றும்!!!!

காதலனுக்கு ஒரு திசை
காதலிக்கோ மறு திசை
யாருடன் செல்வதென்று
தெரியாமல் – பாவம்
நம் காதல்தான்
வாய் மூடி அழுது நிற்கிறது
அனாதையாய்……..!

குழந்தைக்கு என்ன பெயர்?
கேட்டதும் அறைக்குள்
ஒளிந்து கொள்கிறேன்
வெட்கம் என்றெண்ணியிருப்பார்கள்
ஏன் ஒளிந்து கொண்டேன்?
உன் பெயரை சொல்லிவிடக் கூடாது
என்பதற்காகவா?

உலகம் மிகவும் சுருங்கி விட்டது
நாம்தான் தினமும்
தூரமாய் விலகிச் செல்கிறோம்.
கடிதமில்லை..
தொலைபேசியுமில்லை..
மின்னஞ்சல்கள் கூட இல்லை..

இவை
எல்லாம் மறந்துவிட்டோம்
என்று சொல்லிக்கொள்ள நாம் நடத்தும்
நாடகங்களா……?

மறந்துவிட்டேன் என்று
எண்ணி இருந்திருப்பாயோ?
பலமுறை இறந்துவிட்டேன்
என்பதை ஒருமுறையேனும்
உணர்ந்திருப்பாயா?

என்னால் எப்போது
முடிகிறதோ அப்போது
சொல்கிறேன் உன்னிடம்
மறந்துவிடு என்று!
எனக்கு தெரியும்……
உன்னால் முடியுமென்றால்
முன்பே சொல்லியிருப்பாய் என்று…!




காதலனின் கடைசி பக்கம்…..

விரைவில் நான் இறந்துவிடுவேன்…!
உன்னை
மறந்து விடுவதென
முடிவெடுத்து விட்டேன்.


என்றும் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு நாள் உன்னை மறந்திருப்பேன்
அன்று நானும் இறந்திருப்பேன்.

------- உன் (ஒரே) காதலன்.

ஒரு குட்டி தேவதை

சொர்க்கத்தில்
ஒரு தேவதைக்கு
பிரியா விடை!

நட்சத்திர தோழிகளின்
கண்ணீர் மழையில்
அழகாய் நனைகிறது பூமி!

வெள்ளை நிலவின்
உடைந்த சிறு துண்டு போல
பூமிக்கு வந்து சேர்ந்தது
கைகால் முளைத்த
அந்த குட்டி நிலவு!

நிலவில் பிறந்த தேவதையே!
உன்னைப் பார்த்ததும்
உறுதி செய்து கொண்டேன்....
பூமிக்கு வந்து சேரும்
தேவதைகளுக்கு
சிறகுகள் இருப்பதில்லையென்பதை!

வெள்ளி நிலவே!
நீ பிறந்ததும்
அறையில் இருந்த வெளிச்சம்
அந்த நிலவில் கூட இல்லை!

ஜன்னலோரம்
அங்கென்ன சிறு வெளிச்சம்?
மின்மினிப் பூச்சிகளா?
இல்லை
விண்மீன் கூட்டங்களா?

நட்சத்திரங்கள்
உன்னைக் காண
புறப்பட்டத்தில்
வானில் இன்று
போக்குவரத்து நெரிசல்!

உன் முதல் அழுகை!
சில நொடிகள் நின்று
எட்டிப் பார்த்து
புன்னகைத்து விட்டு
சுற்றத் தொடங்கியது
பூமி!

தரையெல்லாம்
ஏங்கி கிடக்கிறது...
பாதம் பதித்து
நீ எப்போது
நடை பழகுவாயென்று!

இனி
சூரியன் தினமும்
காத்திருக்கும்.
நீ கண் திறந்தபின்
உதிப்பதற்கு!

பூமிக்கில்லை
இனி அமாவாசை.
வான் நிலா மறைந்தாலும்
இந்த தேன் நிலா
இருக்கிறாளே!

........ இன்னும் வளர்வாள்